திருப்பரங்குன்றத்தில் அரசு நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், மதுரை மாவட்ட கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சி.எஸ்.ஐ. மதுரை–ராமநாதபுரம் திருமண்டிலம் நிர்வாகம் மீது ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தேவசகாயம் தாக்கல் செய்த மனுவில், குறிப்பிட்ட சர்வே எண்ணில் அரசுக்குச் சொந்தமான 0.28 எக்டேர் புறம்போக்கு நிலம் இருப்பதாகவும், அதில் கடைகள், வீடுகள் அமைத்து வாடகை வசூலிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு விடுதி கட்டப்பட்டதாகவும், காலி நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில், 2025 ஜூலை 18 அன்று கலெக்டர், திருமங்கலம் ஆர்.டி.ஓ. மற்றும் திருப்பரங்குன்றம் தாசில்தாருக்கு நடவடிக்கை கோரி மனு அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது. தாசில்தார் நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பதிலளித்ததாகவும், பின்னர் 2025 ஆகஸ்ட் 26 அன்று சி.எஸ்.ஐ. நிர்வாகத்திற்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை என்றும், அந்த நிலத்தின் மதிப்பு ரூ.200 கோடி எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் நடந்த விசாரணையில், தாசில்தார் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக கலெக்டரிடம் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சி.எஸ்.ஐ. தரப்பு தெரிவித்தது.

இதையடுத்து, மேல்முறையீட்டு மனு எப்போது விசாரித்து முடிக்கப்படும் என்பதை விளக்கி, கலெக்டர் அக்டோபர் 8-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.