சென்னை: கிரானைட்ஸ் தொழில் வர்த்தகர் ‘ஜெம்’ வீரமணி (85) மீதான போக்சோ வழக்கை கையாள்வதில் அலட்சியம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மூன்று போலீஸ் அதிகாரிகள் “காத்திருப்போர் பட்டியலுக்கு” மாற்றப்பட்டுள்ளனர்.

2025 அக்டோபரில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், வீரமணி 12 சிறுமிகளை குறிவைத்ததாக புகார் கூறப்பட்டது. பின்னர் ஆதாரங்கள் இல்லை எனக் கூறி விசாரணை முடித்து வைக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்திற்கு விசாரணை அதிகாரியான உதவி கமிஷனர் யாஸ்மின் அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த அருண் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல், 2024ல் சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராக இருந்த கண்ணனுக்கும் தகவல் தெரிந்திருந்தும் மெத்தனமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அருண், கண்ணன் மற்றும் தற்போது சென்னை கோயம்பேடு உதவி கமிஷனராக உள்ள யாஸ்மின் ஆகியோர் நேற்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இதையடுத்து, அருண் வகித்து வந்த போலீஸ் அகாடமி இயக்குநர் பொறுப்பு, போலீஸ் பயிற்சி டிஜிபி ராஜிவ் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கண்ணன் வகித்து வந்த கோவை கமிஷனர் பொறுப்பு, மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.