ஆட்சி நிர்வாகங்களில் மாற்றம் ஏற்பட்ட பின்னரும், தரமற்ற சாலை பணிகளுக்குப் பொறுப்பானவர்களை பாதுகாக்கும் போக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படுகிறார்களோ என்ற அதிருப்தியை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வெளிப்படுத்தியது.

தமிழக நெடுஞ்சாலைத்துறை ராமநாதபுரம் கோட்டத்தில் தரக் கட்டுப்பாட்டு உதவி பொறியாளராக உள்ள தவநீதி தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் போது இந்தக் கருத்துகள் பதிவானது. சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் அமைக்கப்பட்ட சாலைகளின் தரம் குறைந்ததற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என துறைச் செயலர் வழங்கிய குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்ய அவர் கோரியிருந்தார்.

மனுதாரர் தரப்பில், 2010-ல் வெளியான அரசாணைப்படி சாலை பணிக் குறைபாடுகளுக்கு முதல் நிலையில் களப்பணி அலுவலர்கள், இரண்டாம் நிலையில் தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், மூன்றாம் நிலையில் மேற்பார்வை அலுவலர்கள் என பொறுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், மனுதாரர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தன்னிச்சையானது என்றும் வாதிடப்பட்டது.

நீதிமன்றம் தனது உத்தரவில், 2010 அரசாணை நெடுஞ்சாலைத்துறையின் இணையதளத்தில் இடம்பெறவில்லை என குறிப்பிட்டது. மேலும் பல சாலைகள் இரண்டு ஆண்டுகளுக்குக்கூட தாக்குப்பிடிக்காத நிலை, ஒப்பந்தங்கள் ‘சிண்டிகேட்’ அமைத்து வழங்கப்படுவது தொடர்பாக நீதிமன்றம் முன்பே பல வழக்குகளை விசாரித்திருப்பது, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்பட்டும் கண்காணிப்பு-கட்டுப்பாட்டு நடைமுறை தெளிவாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியது.

ஒப்பந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட தரநிலைகளின்படி சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்ய எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது, 2010 அரசாணையின் அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் முதல், இரண்டாம், மூன்றாம் நிலை அலுவலர்களுக்கு எதிராக எத்தனை ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இவ்வழக்கில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன என்பவற்றை நீதிமன்றம் கேள்வியாக எழுப்பியது. மேலும் 2010 அரசாணையை அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாததற்கான காரணங்களை விளக்கி, தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலர் செப். 28-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.