பாஜக “சேவா சங்கல்ப் யாத்திரை”யில் பங்கேற்றவர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களே நாட்டின் முதுகெலும்பாக இருப்பார்கள் என்று தெரிவித்தார்.

மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்க்கையை முன்னிட்டு, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை “சேவா சங்கல்ப் அபியான்” என்ற பெயரில் பாஜக நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குஜராத்தின் வட்நகரில் இருந்து மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசி வரை யாத்திரை நடத்தப்படுகிறது.

குழுவினரிடம் பேசிய மோடி, அவர்களின் சேவை மனப்பான்மையும் முயற்சிகளும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக கூறினார். மேலும், வட்நகர் மற்றும் வாரணாசி இரண்டும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நகரங்கள் என்றும், வட்நகர் தனது பிறந்த இடம், வாரணாசி தனது பணியிடம் என்பதால் இந்த பயணம் தனிப்பட்ட முறையிலும் சிறப்பு வாய்ந்தது என்றும் குறிப்பிட்டார்.

தன்னலமற்ற சேவை மனப்பான்மையால்தான் ஆயுஷ்மான் யோஜனா போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என அவர் கூறினார். நாட்டை உருவாக்குவதே முக்கிய நோக்கம் என்றும், “விக்சித் பாரத்” இலக்கை நோக்கி முன்னேறி வருகிறோம் என்றும், 2047க்குள் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.