தலைமை தேர்தல் கமிஷனர் (CEC) ஞானேஷ் குமாருக்கு எதிராக, பார்லிமென்டில் மூன்றாவது முறையாக பதவி நீக்க நோட்டீஸ் தாக்கல் செய்ய ‘இண்டி’ கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், மற்ற தேர்தல் கமிஷனர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. கடந்த 10 மாதங்களில் புதிய வாக்காளர்களை சேர்த்தல், பெயர் நீக்கங்கள், வாக்காளர் தரவுதள அணுகல், புதிய பதிவுக்கான படிவம்-6 மாற்றங்கள் போன்ற விஷயங்களில் 14 முறை எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல அரசியல் தலைவர்கள் தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து, பார்லிமென்ட் வளாகத்தில் மூத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூடி ஆலோசனை நடத்தியதாகவும், அரசியலமைப்பு பதவியின் கண்ணியத்தை சீர்குலைத்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முறை தனித்தனியாக அல்லாமல், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து கூட்டு உத்தியுடன் நோட்டீஸ் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும், பார்லிமென்ட் கூட்டத்தொடர் இல்லாவிட்டாலும் அடுத்த வாரத்துக்குள் நோட்டீஸ் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, மார்ச் 12 மற்றும் ஏப். 24 ஆகிய தேதிகளில் ஞானேஷ் குமாருக்கு எதிராக இரண்டு பதவி நீக்க நோட்டீஸ்களை எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்திருந்தன. முதல் நோட்டீஸுக்கு துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்தனர்; இரண்டாவது நோட்டீஸ் மீது இன்னும் முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.




