சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்துக்காக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை மற்றொரு துறைக்கு மாற்ற அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு வசதி வாரிய விதிகளின்படி, வாரிய நிலங்களை ஒதுக்கீடு செய்வது, பிற துறைகள் பயன்படுத்த அனுமதிப்பது அல்லது விற்பனை செய்வது போன்ற முடிவுகள் நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இவ்விவகாரத்தில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என புகார் கூறப்படுகிறது.
பட்டினப்பாக்கம் நிலம் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்காக 1958-ல் பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குடியிருப்பு நோக்கத்துக்காக பெற்ற நிலம் தற்போது வணிக பயன்பாட்டுக்காக வகைப்பாடு மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு பொதுநோக்கத்துக்காக வாரிய நிலத்தை பயன்படுத்த விரும்பினால், சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து உரிய கடிதம் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் நிர்வாகக் குழுவில் வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றார். அந்த தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே நிலத்தை மற்றொரு துறை பயன்படுத்த அனுமதிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரத்தில் இந்நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை; அரசின் அழுத்தத்தால் நிர்வாக இயக்குநர் நிலத்தை வழங்கியதாகவும், இதனால் சட்ட ரீதியான குழப்பம் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.





