தமிழகத்திற்கு காவிரியில் 20 டிஎம்சி அளவில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கர்நாடக அரசு ஒரு வாரத்திற்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறைந்த மழை பெய்த ஆண்டில் உரிய நேரத்தில் பங்குநீர் திறக்கப்படாததால் பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தமிழக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், இந்த குறைவு தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழகத்தின் கணக்குப்படி 20 டிஎம்சி நீர் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், விகிதாச்சார அடிப்படையில் நீர் திறந்தால் மட்டுமே தமிழக பங்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த ஜூன் மாதத்தில் கர்நாடக அணைகளில் போதிய இருப்பு இருந்தபோதும், குளங்கள் மற்றும் தடுப்பணைகளுக்கு 19 டிஎம்சி அளவுக்கு நீர் மடைமாற்றம் செய்யப்பட்டதாகவும், இதனால் தமிழகத்திற்கு வரும் பங்கீடு குறைய வாய்ப்புள்ளதாகவும் தமிழக தரப்பு வாதிட்டது.
இதற்கு கர்நாடக தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவில் மழை குறைவால் பல மாவட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கடுமையான நீர் தட்டுப்பாடும் நிலவுவதாக கூறினார். CWMA உத்தரவுகளை கர்நாடக அரசு அமல்படுத்தி வருவதாகவும், ஆனால் தமிழகம் கோரும் கூடுதல் நீரை திறக்க முடியாத சூழல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீர் குறைவு குறித்த புகாரில் CWMA உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி, 20 டிஎம்சி குறைவு தொடர்பாக கர்நாடகா ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தனிநபர்கள் அல்லது தனியார் அமைப்புகள் தாக்கல் செய்யும் இடையீட்டு மனுக்களை நீதிமன்றம் ஏற்காது என்றும் கூறி, வழக்கை அக்டோபர் 12க்கு ஒத்திவைத்தது. இதற்கிடையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையை CWMA உறுதி செய்து, 15 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கனஅடி நீரை தமிழகத்திற்கு திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டதாகவும், அந்த உத்தரவுப்படி நீர் திறக்கப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நீர் நிலவரம் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது.





