இசைக்கலைஞரும், பா.ஜ. எம்.பி. தேஜஸ்வி சூர்யாவின் மனைவியுமான சிவஸ்ரீ, ரயில் பயணத்தில் ஏற்பட்ட அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு கவனம் பெற்றுள்ளது.
அவர் கூறியதாவது: தன் பெட்டியில் சுமார் 40 பேர் கொண்ட ஆண்கள் குழு, பயணம் முழுவதும் இடைவிடாமல் சத்தமாக பேசிக்கொண்டே இருந்ததால், அமைதியான பயணம் என்ற எதிர்பார்ப்பு குலைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் டி.டி.இ.யிடம் புகார் தெரிவித்தபின், அந்த குழு வேண்டுமென்றே பாலிவுட் பாடல்களை பாடத் தொடங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் “யார் வென்றார்கள்” என்பது முக்கியமில்லை என்றும், குடிமை உணர்வை காக்கும் விஷயத்தில் நாமே தோற்றுவிட்டோம் என்ற உணர்வே அதிகம் என்றும் அவர் பதிவில் தெரிவித்தார். ஒரு தேசமாக பொதுநடத்தை எப்போது மேம்படும் என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இதனிடையே சமூக வலைதளங்களில் வேறு சில பதிவுகளும் டிரெண்டாகின. டில்லி யமுனை நதியில் கழிவுகளை அகற்றிய கல்லூரி மாணவரின் முயற்சி, பிவாண்டியில் பள்ளி குழந்தைகள் ஆட்டோவில் நெருக்கமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோவுக்கு பின்னர் போக்குவரத்து போலீசார் எடுத்த நடவடிக்கை, மேலும் நோயாளிகளின் வருமானத்திற்கேற்ப கட்டணம் பெறும் குஜராத் மருத்துவரின் சேவை ஆகியவை பேசுபொருளானது.
அதேபோல், தங்கையின் கண் அறுவை சிகிச்சைக்காக என எக்ஸ் தளத்தில் பணம் திரட்டிய 16 வயது சிறுவன் தொடர்பான விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனை நிர்வாகம் இது மோசடி என கூறிய நிலையில், அந்த கணக்கில் பின்னர் ‘பணம் தந்தையின் சிகிச்சைக்காக தேவைப்பட்டது; திருப்பிக் கொடுக்கிறேன்’ என பதிவு வெளியானதாக கூறப்படுகிறது; பணம் அனுப்பியவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.




