திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள சிக்கந்தர் அவுலியா தர்காவுக்கு சமையல் பொருட்களுடன் சென்ற நிர்வாகிகளை போலீசார் வியாழக்கிழமை காலை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

தர்காவில் வழிபாட்டுக்காக முறைதாரர்கள் மலைக்கு செல்வதும், அவர்கள் ஏழு நாட்களுக்கு ஒருமுறை மாறுவதும் வழக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் முறைதாரர் அப்பாஸ் குடும்பத்துடன் அரிசி, தக்காளி, வெள்ளைப் பூண்டு, வெங்காயம் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

மலைக்கு மேலே செல்லும் பாதையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சமையல் செய்யும் பொருட்களை மலைமேல் கொண்டு செல்ல அனுமதி இல்லை என கூறி அவர்களை நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவதாக கூறி, தர்கா சாவியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு மின்அடுப்பு மற்றும் கூடுதல் பொருட்களுடன் மீண்டும் செல்ல முயன்றபோது மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், மலைமேல் உணவு சமைக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை போலீசார் குறிப்பிட்டு, பழங்கள், பேரிச்சம்பழம், பிஸ்கட் போன்றவற்றை மட்டும் எடுத்துச் செல்லலாம் என அறிவுறுத்தினர்.

இதையடுத்து நிர்வாகிகள் பழங்கள், பேரிச்சம்பழம், பிஸ்கட் உள்ளிட்டவற்றை மட்டும் எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.