சென்னை: மூன்று நாள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம் காரணமாக பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதால், மத்திய அரசின் முடிவைத் தொடர்ந்து தமிழக அரசும் செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை இன்றே வழங்க முடிவு செய்துள்ளது. வழக்கமாக 30ம் தேதி வழங்க வேண்டிய தொகை, ஐந்து நாட்கள் முன்பே கிடைக்கிறது.

வங்கி ஊழியர் சங்கங்கள் செப்டம்பர் 28 முதல் 30 வரை தொடர்ச்சியான வேலைநிறுத்தம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை, அலுவலர்கள்–அதிகாரிகள் இடையேயான பாரபட்ச நடவடிக்கைகளை மாற்றுதல், ஐ.டி.பி.ஐ. வங்கியை தனியார்மயமாக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன. வேலைநிறுத்தத்திற்கு முன் வார விடுமுறைகளும், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மற்றும் அதனைத் தொடர்ந்து விடுமுறைகளும் வருவதால், வங்கிச் சேவைகள் ஒரு வாரத்துக்கும் மேலாக முடங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் இயங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் சில சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பணிக்கு வராமல் விடுப்பு எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், இதனால் ஞாயிற்றுக்கிழமை இயங்கினாலும் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் மற்றும் ஓய்வூதியம் 30ம் தேதி வழங்க வேண்டிய நிலையில், தொடர் விடுமுறைகள் மற்றும் வேலைநிறுத்தம் காரணமாக தாமதம் ஏற்படும் என்பதால், மத்திய நிதி அமைச்சகம் 25ம் தேதியே வழங்க முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து தமிழக நிதித் துறை செயலர் சித்திக், அனைத்து துறைகளும் சம்பளம், தினக்கூலி, ஓய்வூதிய பட்டியல்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பிரிவு இயக்குநர், சம்பள கணக்கு அலுவலர்கள் மற்றும் கருவூல அலுவலர்களுக்கு, அரசு ஊழியர்கள், தினக்கூலி பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் பட்டியல்களை இன்றே வழங்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் வங்கி இடையூறு ஏற்படுவதற்கு முன்பே தொகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.