யுபிஐ பரிவர்த்தனைகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய ‘மெர்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட்’ (எம்டிஆர்) கட்டணம் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது வரி, செஸ் அல்லது அரசாங்கம் விதிக்கும் கூடுதல் கட்டணம் அல்ல; வணிகர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் என்றார்.

தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) யுபிஐ மூலம் டிஜிட்டல் முறையில் பணம் பெறும் நிறுவனங்களுக்கு கட்டண விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.2,000-க்கு மேல் பெறும் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும்; பரிவர்த்தனை ரூ.75,000 அல்லது அதற்கு மேல் இருந்தாலும் கட்டணம் ரூ.300 என்ற உச்சவரம்புக்குள் இருக்கும்.

ரயில்வே, தொலைத்தொடர்பு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய துறைகளில் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு ஒரே கட்டணமாக ரூ.5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தை வணிகத்துடன் தொடர்புடைய யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.02% கட்டணம் வசூலிக்கப்படும்.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலளித்த நிர்மலா, இந்தத் தொகை இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதிக்குச் செல்லாது என்பதால் இதை அரசாங்கம் விதித்த கட்டணமாக காட்டுவது தவறு என்றார். மேலும் ரூ.2,000-க்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களிடம்கூட இந்தக் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் கூறினார்.