சென்னை: ‘ஜெம் கிரானைட்ஸ்’ வீரமணி தொடர்பான விவகாரத்தில், அவரது நெருங்கிய தோழி சாந்தி (61) தனிப்பட்ட வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் தரப்பின் தகவலின்படி, வீரமணி சாந்தியை மிகுந்த நம்பிக்கையுடன் அணுகி வந்ததாகவும், சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் (63) தங்குவதற்காக தேனாம்பேட்டையில் சொகுசு பங்களாவை வாடகைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், பணம் கொடுப்பதை நிறுத்தியதும், சாந்தி வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டத் தொடங்கியதாக போலீஸ் கூறுகிறது.

இந்த பிரச்னை காரணமாக, சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் வாங்கியிருந்த சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.70 கோடிக்கு விற்கும் நிலைக்கு வீரமணி தள்ளப்பட்டதாகவும் போலீஸ் கூறியுள்ளது. இந்த நில விவகாரத்தில் தொடர்புடைய வழக்கறிஞர் ஒருவர் சாந்தியிடம் பேசி விலகிக் கொள்ளுமாறு கூறியதாகவும், தென் மாவட்ட அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் பெயரும் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தமிழக நிர்வாகி ரஞ்சன்குமார் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோரின் பங்கு குறித்து, மேலும் பண பரிமாற்றம் நடந்ததா என்பதையும் போலீஸ் விசாரித்து வருகிறது.

இதற்கிடையில், காங்கிரஸ் எஸ்.சி./எஸ்.டி. பிரிவு தமிழக தலைவர் ரஞ்சன்குமார், ரியல் எஸ்டேட் தொடர்பான விவகாரத்தில் சாந்தியின் அறிமுகம் கிடைத்ததாகவும், பணப் பிரச்னை குறித்து பேசுவதற்காக அவர் வீட்டிற்கு சென்றபோது தான் இந்த விவகாரம் தெரிந்ததாகவும் கூறினார். சாந்தியின் கணவர் ரகசிய கேமராவில் சில காட்சிகளை பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அவை டிவியில் இயக்கப்பட்டபோது தன் மொபைலில் பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சாந்தி–ஜான் பாண்டியன் சந்திப்பை ஏற்பாடு செய்ததாகவும், அந்த உரையாடலின்போது வீரமணியை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக தெரிந்ததும் தன்னை விலக்கிக் கொண்டதாகவும் ரஞ்சன்குமார் கூறினார். மேலும், 2024 நவம்பரில் வீடியோ ஆதாரத்துடன் சென்னை போலீசில் புகார் அளித்ததாகவும், பின்னர் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஆதாரங்களை வழங்கியதாகவும் தெரிவித்தார். 2025 அக்டோபரில் ‘போக்சோ’ வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் ஆதாரங்கள் இல்லை என விசாரணை மூடப்பட்டதாக கூறப்படுவது தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாகவும் அவர் கூறினார்.