சென்னை: மதுராந்தகத்தில் இன்று முதல்வர் விஜய் பிரசாரம் செய்ய உள்ள நிலையில், கூட்டத்தில் பங்கேற்போர் எண்ணிக்கை 7,000 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் அக்.6-ம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பின்னர் த.வெ.க.வில் இணைந்த மரகதம் குமரவேல், அந்தக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று தொகுதியில் பிரசார கூட்டத்தில் பேசுகிறார். சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று பிற்பகலில் தனது பிரசார வாகனத்தில் நின்றபடி அவர் உரையாற்ற உள்ளார்.

இந்த கூட்டத்தில் த.வெ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 7,000 பேருக்கு மட்டும் கியூஆர் குறியீடு கொண்ட அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மரகதம் குமரவேல் பிரசாரம் நடைபெறும் இடங்களில் சிலர் பிரச்னை ஏற்படுத்துவதாக நிர்வாகிகள் புகார் கூறுகின்றனர். இதனால் வெற்றி வாய்ப்பு பாதிக்கலாம் என்பதால், தீவிர பிரசாரத்தின் மூலம் அவரின் வாய்ப்பை உறுதி செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.