கிரானைட்ஸ் தொழில் அதிபர் ‘ஜெம்’ வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பான போக்சோ வழக்கை விசாரிக்க, 4 பெண் காவல் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்க டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

தகவலின்படி, 12 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக 2025 அக்டோபரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆதாரங்கள் இல்லை எனக் கூறி விசாரணை முன்பு முடித்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது வழக்கில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படும் நிலையில், வழக்கை கையாள்வதில் அலட்சியம் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சில மூத்த காவல் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு போலீஸ் ஐ.ஜி. தேன்மொழி தலைமை வகிக்கிறார். இணை ஆணையர் திஷா மித்தல், காவல் கண்காணிப்பாளர்கள் முத்தரசி மற்றும் கீதாஞ்சலி ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.