ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் போல் வால்ட்டில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை தமிழகத்தின் பரனிகா இளங்கோவன் பதிவு செய்துள்ளார்.
நேற்று நடைபெற்ற பெண்கள் போல் வால்ட் போட்டியில் இந்தியா சார்பில் பரனிகா (தமிழ்நாடு) மற்றும் சிந்து ஸ்ரீ (கர்நாடகா) பங்கேற்றனர். பரனிகா தொடக்கத்தில் 3.85 மீ. மற்றும் 4.00 மீ. உயரங்களை தாண்டி, 4.15 மீ. உயரத்தை இரண்டாவது முயற்சியில் வெற்றிகரமாக தாண்டினார்.
கஜகஸ்தானின் போலினா இவனோவாவும் 4.15 மீ. உயரத்தை இரண்டாவது முயற்சியில் தாண்டினார். தொடர்ந்து 4.25 மீ. உயரத்தை இருவரும் தலா மூன்று முயற்சிகள் எடுத்தும் தாண்ட முடியாததால், வெண்கலப் பதக்கத்திற்கு சமநிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் வெண்கலத்தை தீர்மானிக்க டை பிரேக்கர் நடத்தப்பட இருந்தது. ஆனால் இருவரும் வெண்கலப் பதக்கத்தை பகிர்ந்து கொள்ள சம்மதித்ததால் டை பிரேக்கர் நடத்தப்படவில்லை. ஜப்பானின் மிசாகி 4.55 மீ. உயரத்துடன் தங்கம் வென்றார்; சீனாவின் சுங்கே 4.50 மீ. உயரத்துடன் வெள்ளி பெற்றார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் 29 வயதான பரனிகா. ஆறு வயதில் தடகளத்தில் தொடங்கிய அவர், ஆரம்பத்தில் நீளம் தாண்டுதல் மற்றும் டிரிபிள் ஜம்ப் போட்டிகளில் பங்கேற்றார். கல்லூரியில் சேர்ந்த பிறகு போல் வால்ட்டுக்கு மாறினார். கடந்த மார்ச் மாதம் உள்ளரங்கு போட்டியில் 4.22 மீ. உயரம் தாண்டி தேசிய சாதனை படைத்த அவர், இப்போது ஆசிய விளையாட்டிலும் பதக்கத்துடன் சாதனை சேர்த்துள்ளார்.





