மும்பை: கூகுளின் ஜெமினி ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ‘கால் பார் மீ’ என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றுக்கு பயனர்களுக்குப் பதிலாக ஏ.ஐ. போன் செய்து தேவையான தகவல்களை பெற்றுத் தரும்.
வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தகவல் பரிமாற்றம் அதிகரித்தாலும், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு சர்வீஸ் கேட்பது, உணவகத்தில் மேஜை முன்பதிவு செய்வது, புதிய பொருட்கள் வாங்க விலை விவரம் கேட்பது போன்ற பணிகளுக்கு இன்னும் போன் பேச வேண்டிய நிலை உள்ளது.
இந்த சூழல்களில் உதவியாக, மொபைலில் உள்ள ஜெமினி செயலியில் “@Call for Me” என்று டைப் செய்து, தொடர்பு கொள்ள வேண்டிய எண் உள்ளிட்ட விவரங்களையும் செய்ய வேண்டிய பணியையும் பதிவு செய்யலாம். உதாரணமாக, குறிப்பிட்ட உணவகத்தில் நாளை இரவு 7:00 மணிக்கு இரண்டு பேருக்கு மேஜை முன்பதிவு செய்யுமாறு ஜெமினியிடம் தெரிவிக்க முடியும்.
அழைப்பை தொடங்குவதற்கு முன், எந்த எண்ணை தொடர்பு கொள்ளப் போகிறது, என்ன தகவலை சொல்லப் போகிறது என்பதற்கான சுருக்கத்தை ஜெமினி வழங்கும். பயனர் அதை சரிபார்த்து அனுமதி அளித்ததும், ஜெமினி அழைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தகவல்களை சேகரிக்கும்.
அழைப்பை எந்த நேரத்திலும் ரத்து செய்யவும், அல்லது பயனர் தாமே உரையாடலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளவும் முடியும். இந்த வசதி தற்போது அமெரிக்காவில் மட்டும் சோதனை அடிப்படையில் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





