மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். (எம்.ஜி. ராமச்சந்திரன்) பெயரில் திருச்சியில் உள்ளதாக கூறப்படும் சொத்தை நிர்வகிக்கும் உரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சுரேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஜானகியின் முதல் கணவரின் மகன் எனத் தன்னை குறிப்பிட்டு, திருச்சியில் உள்ள எம்.ஜி.ஆர். சொத்தை நிர்வகிக்கும் உரிமையை தமக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். எழுதி வைத்த உயிலில் அந்த சொத்து குறித்து குறிப்பிடப்படவில்லை என்றும், இதுவரை யாருக்கும் எழுதிக் கொடுக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பு வாதிட்டது.

இந்த வழக்கில், எம்.ஜி.ஆர். சகோதரர் சக்கரபாணியின் வாரிசுகள் தரப்பில், அந்த சொத்தில் தங்களுக்கும் உரிமை இருப்பதாக கூறி, தங்களையும் வழக்கில் இணைத்து விசாரிக்க வேண்டும் என கோரினர்.

நீதிபதி மரியா கிளீட் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் ஜானகி எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதற்கான சான்றுகள் தாக்கல் செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டார். மேலும், ஜானகி 1996ல் மறைந்த நிலையில், 2019ல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இடைப்பட்ட காலத்தில் அந்த சொத்து யார் வசம் இருந்தது, யாருடைய பெயரில் மாற்றப்பட்டதா அல்லது அடமானம் வைக்கப்பட்டதா போன்ற முக்கிய தகவல்களை மனுதாரர் வழங்கவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

சொத்து தொடர்பான உரிமைகள் தெளிவாகவும், போதிய ஆவணங்களும் இல்லாததால், முதன்மனுவையும் சக்கரபாணி வாரிசுகள் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில், உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுக அனுமதியும் வழங்கப்பட்டது.