நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தில், பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் இருக்கும் என்றும், ஆண்டுதோறும் பொய்களை மீண்டும் கூறுவதால் அவை உண்மையாகிவிடாது என்றும் இந்தியா கடுமையாக எச்சரித்தது.

எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் குறித்து பாகிஸ்தான் முன்வைத்த கருத்துகளுக்கு பதிலளித்த ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் பெதல் கெஹ்லோட், பாகிஸ்தான் நீண்டகாலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்வதாக குற்றம்சாட்டினார்.

பயங்கரவாதிகளுக்கு ஓடவும் ஒளியவும் இடமில்லை என்பதை கடந்த ஆண்டு “ஆபரேஷன் சிந்தூர்” என குறிப்பிடப்பட்ட ராணுவ நடவடிக்கையின் மூலம் இந்தியா நிரூபித்ததாகவும் அவர் கூறினார்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் பேசுவது வேடிக்கையானது என குறிப்பிட்ட அவர், அந்நாட்டில் ராணுவத்தின் தாக்கத்தில் ஆட்சி இயங்குவதாகவும், சிறுபான்மையினரை எவ்வாறு நடத்துகிறது என்பதை உலகம் அறிந்துள்ளதாகவும் கூறினார். மேலும், பாகிஸ்தான் பயங்கரவாதம், வஞ்சகம் மற்றும் இரட்டை வேடம் ஆகியவற்றில் ஈடுபடுவதாகவும் சாடினார்.

இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பெதல் கெஹ்லோட், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், அங்கு கண்மூடித்தனமான கொலைகள் மற்றும் கொடூரமான வன்முறை நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.