ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் எந்தத் திட்டமும் இல்லை என்றும், தங்களின் அணுசக்தி நிலையங்களை சர்வதேச ஆய்வாளர்கள் வந்து சோதித்து உறுதிப்படுத்த அனுமதிக்கத் தயாராக இருப்பதாகவும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற நிலையில், ‘பாக்ஸ் நியூஸ்’க்கு அளித்த பேட்டியில் அவர் இதை கூறினார். அணு ஆயுதங்கள் மதத் தீர்ப்பின்படி சட்டவிரோதம் என்றும், அணு ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக யுரேனியம் செறிவூட்டலைக் குறைக்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாகக் குற்றம்சாட்டி, அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரியில் தாக்குதல் நடத்திய பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேற்காசியாவில் நடைபெறும் மோதல்களுக்கு அமெரிக்காவே முழுக் காரணம் என்றும், பேச்சுவார்த்தை மூலம் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மதிக்கவில்லை என்றும் பெசெஷ்கியான் குற்றம்சாட்டினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுகிறது என்றும் அவர் கூறினார்.





