பா.ஜ.க. முக்கிய தலைவர்களை குறிவைத்து, நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை நடத்த சதி திட்டமிட்டதாக கூறப்படும் இருவரை கர்நாடக போலீசார் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் கைது செய்துள்ளனர்.
மத்திய அரசிடமிருந்து வந்த தகவலின் அடிப்படையில், சிக்கபல்லாபூரில் பயங்கரவாத நடவடிக்கைகளை அரங்கேற்ற டெலிகிராம் தகவல் பரிமாற்ற செயலியில் குழு அமைத்து திட்டமிடப்படுவதாக மாநில உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையில், சிக்கபல்லாபூர் டவுன் பாபுஜி நகரைச் சேர்ந்த சபீர் (23) என்பவர் டெலிகிராம் குழுவை உருவாக்கி, நாட்டுக்கு எதிரான மனநிலையிலுள்ளவர்களை ஒருங்கிணைத்து தாக்குதல் திட்டங்கள் குறித்து பேசினதாக தெரியவந்ததாக கூறப்படுகிறது. அவரை செப்டம்பர் 23 அன்று போலீசார் கைது செய்தனர்.
அதே குழுவில் இருந்த ஹாசன் மாவட்டம் அரகலகூடுவில் வசிக்கும் சல்மான் (25) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என போலீசார் கூறினர். முதற்கட்ட விசாரணையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் மற்றும் கர்நாடக பா.ஜ.க. தலைவர்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால், சி.டி. ரவி, பிரதாப் சிம்ஹா ஆகியோரை குறிவைத்ததாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிக்கபல்லாபூர் எஸ்.பி. பத்மினி சாஹூ கூறுகையில், பல இடங்களில் குண்டு வெடிப்புகளை நடத்த திட்டமிட்டதாகவும், வெடிபொருட்கள் வாங்க பணம் திரட்டும் நோக்கில் பணக்காரர்களை கடத்தி பணம் பறிக்கும் முயற்சியையும் பரிசீலித்ததாகவும் கூறினார். கைதான இருவரிடமும் விசாரணை தொடர்வதாகவும், டெலிகிராம் குழுவுடன் தொடர்புடைய மற்றவர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





