மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கி 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பல துறைகளிலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகப் பதிவில் அவர், “இந்தியாவில் அதிக உற்பத்தி, இந்தியாவில் அதிக முதலீடு, இந்தியாவில் இருந்து அதிக ஏற்றுமதி” என மாற்றங்கள் தெளிவாக தெரிகின்றன என்று குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வளமடைவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு, தொழில் மற்றும் புதுமைகளை உருவாக்குவதே திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

செமிகண்டக்டர், விண்வெளி மற்றும் விமானத் துறை, ரயில் இன்ஜின்கள் மற்றும் பெட்டிகள் தயாரிப்பு, கப்பல் கட்டுமானம், மெட்ரோ ரயில் வலையமைப்பு, ஆட்டோமொபைல், மருந்துகள், சூரிய மின் உற்பத்தி, மொபைல் போன் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா அடைந்த முன்னேற்றங்களை விளக்கும் வீடியோவையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவை உலகளாவிய உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் புதுமை மையமாக உருவாக்கும் நோக்கில், ‘மேக் இன் இந்தியா’ திட்டம் 2014 செப்டம்பர் 25-ல் தொடங்கப்பட்டது. முதலீடுகளை எளிதாக்குதல், புத்தாக்கத்தை ஊக்குவித்தல், உலகத் தர உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் திட்டம் கவனம் செலுத்துகிறது. ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் நடைமுறைகள் மற்றும் கொள்கைகளை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக ‘மேக் இன் இந்தியா - 2.0’ திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது உற்பத்தித் துறையில் 15 மற்றும் சேவைத் துறையில் 12 என மொத்தம் 27 துறைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் உள்நாட்டு சந்தைக்காக மட்டுமே உற்பத்தி செய்த நிலைமையிலிருந்து, உலக சந்தைகளுக்காகவும் இந்தியா உற்பத்தி செய்யும் நிலைக்கு முன்னேறியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்தார்.