நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானியை கடுமையாக விமர்சித்தார். அதே நேரத்தில், ஹமாஸ், ஹெஸ்பொல்லா மற்றும் ஈரானுக்கு எதிராக மேற்கொண்டதாக கூறிய ராணுவ நடவடிக்கைகளையும் அவர் ஆதரித்து பேசினார்.
உரையின் போது துருக்கி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளையும் அவர் விமர்சித்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஹெஸ்பொல்லாவை குறித்த எச்சரிக்கையாக பேஜர் கருவியை காட்டி, அது அவர்களுக்கு நினைவிருக்கும் என குறிப்பிட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கள் படைகள் “ஏழு முனைகளில்” போரிட்டதாக கூறிய நெதன்யாகு, ஈரான் அணு ஆயுதங்கள் உருவாக்குவதைத் தடுக்க உறுதி அளித்திருந்ததாகவும் தெரிவித்தார். இஸ்ரேலை அழிக்கும் நோக்கில் உருவாகும் அணு ஆயுதங்கள் உலகத்திற்கே அச்சுறுத்தல் எனவும் அவர் கூறினார்.
ஈரான் இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து அழிக்க திட்டமிட்டதாக குற்றம்சாட்டிய அவர், அமெரிக்காவுடன் இணைந்து ஈரானின் ராணுவம் மற்றும் அணு மையங்களை தாக்கி அழித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, இஸ்ரேல் மீது போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை மம்தானி முன்வைப்பதாக கூறி, இஸ்ரேல் இனப்படுகொலை செய்யவில்லை; மாறாக அதைத் தடுத்ததாக வலியுறுத்தினார்.
மேலும், ஹமாஸ் ஆதரவு தொடர்பாக தண்டனை பெற்றவர்களை மம்தானி பாராட்டியதாகவும், 9/11 தாக்குதல் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்தவர்களை நண்பர்களாகக் கருதுவதாகவும் நெதன்யாகு குற்றம்சாட்டினார். மம்தானியின் குடும்பத்தினரின் சமூக ஊடக செயல்பாடுகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார். மம்தானி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நியூயார்க்கில் பல யூதர்கள் பாதுகாப்பற்ற உணர்வை வெளிப்படுத்துவதாகவும், ஐநா உரைக்காக தனது நியூயார்க் வருகையை தடுக்க முயன்றது வெற்றியடையவில்லை என்றும் அவர் கூறினார்.





