பாட்னா லோக் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவில் இளையோரிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கவலை தெரிவித்தார்.

குழந்தைகள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் உயர்வது பொது சுகாதாரச் சவால் மட்டுமல்ல; அது குழந்தை பாதுகாப்பு பிரச்னையாகவும் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என அவர் கூறினார். இந்தியாவில் டீனேஜர்களில் ஐந்து பேரில் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருட்களை கடத்தி, குழந்தைகளை வலையில் வீழ்த்தி சுரண்டும் குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்து, முறையான சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் மூலம் அவர்களை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

குழந்தைப் பருவத்தில் கல்வி, விளையாட்டு மற்றும் எதிர்காலத்தின் மீது தன்னம்பிக்கை உருவாகும் சூழலை ஏற்படுத்துவது முக்கியம்; அத்தகைய அணுகுமுறையே போதைப்பழக்கத்திலிருந்து குழந்தைகளை காக்க உதவும் என சூர்யகாந்த் தெரிவித்தார்.