வாக்காளர் பட்டியலில் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோத மாற்றங்கள் செய்யப்பட்டதாக கூறி, தலைமை தேர்தல் கமிஷனர் (CEC) ஞானேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) உள்ளிட்ட பல விவகாரங்களில், மற்ற இரு தேர்தல் கமிஷனர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியான செய்தி மேற்கோளாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களில் பல முறை எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டதாகவும் மனுதாரர் கூறுகிறார்.
மேலும், வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் 6-ல் சட்டப்பூர்வ அனுமதி அல்லது விதி திருத்தம் இன்றி கடுமையான நிபந்தனைகள் சேர்க்கப்பட்டதாகவும், பெரும்பான்மை கமிஷனர்கள் சுட்டிக்காட்டியபோதும் அவை நீக்கப்படாமல் தொடர்ந்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, டில்லியில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கோவா மற்றும் மேற்கு வங்கம் தொடர்பான வாக்காளர் சேர்க்கை/நீக்கம் விவகாரங்களில், மற்ற கமிஷனர்களின் கவனத்திற்கு வராமல் மேல்முறையீடுகள் செய்யப்பட்டதாகவும், இதில் தலைமை கமிஷனர் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாகவும் மனு கூறுகிறது. சட்டத்தின் பிரிவு 16ன் கீழ் உள்ள பாதுகாப்பு அதிகாரப்பூர்வ கடமைச் செயல்பாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என வாதிட்டு, அதிகார மீறல் தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மேலும், பெரும்பான்மை ஒப்புதல் இன்றி எடுக்கப்பட்டதாக கூறப்படும் முடிவுகள், வழிகாட்டுதல்கள் மற்றும் மென்பொருள் மாற்றங்களை செல்லாதவை என அறிவிக்க வேண்டும்; SIR பணியின் போது கோடிக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு மூலம் விசாரிக்க வேண்டும்; பழைய சட்டப்பூர்வ படிவம் 6 நடைமுறையை உடனடியாக மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.





