சேலத்தில் பட்டா மாற்ற நடவடிக்கைக்காக ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக சார்பு நில அளவையர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கதிரவன், தந்தை பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு பட்டா மாற்ற அம்மாபேட்டை நில அளவைத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இந்த விண்ணப்பத்தை முன்னெடுக்க சார்பு நில அளவையர் முருகேசன் (37) ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கதிரவன் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூ.5,000-ஐ கதிரவன் வழங்கியபோது, முருகேசனும் இடைத்தரகர் என கூறப்படும் பூவரசன் (27) என்பவரும் பணத்தை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.