சமூக ஊடகங்களில் சிறார்கள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள் (CSAM) பரவுவதைத் தடுக்க மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதைக் குறித்து, உச்ச நீதிமன்றம் விரிவான பதில் தாக்கல் செய்ய “இறுதி வாய்ப்பு” வழங்கியுள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் வினோத் கே. சந்திரன் அமர்வு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் ஆகியவற்றிடம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
சிறார்கள் நல அமைப்பான ‘ஜஸ்ட் ரைட்ஸ் பார் சில்ட்ரன் அலையன்ஸ்’ தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி இரு அமைச்சகங்களும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், இதுவரை பதில் தாக்கல் செய்யப்படவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது.
விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக அணுகி வருவதாக தெரிவித்தார். விதிமீறலில் ஈடுபட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மனுதாரர் தரப்பில், சமூக வலைதளங்களில் இத்தகைய உள்ளடக்கங்கள் பரவினால் போக்சோ சட்டத்தின் கீழ் உடனடியாக உள்ளூர் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் முன்பே உத்தரவிட்டிருந்தாலும், பல சமூக வலைதள நிறுவனங்கள் அதை முறையாக பின்பற்றவில்லை என வாதிடப்பட்டது. மேலும், ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் இத்தகைய உள்ளடக்கங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு பணம் பெறப்பட்டு, பின்னர் ‘டெலிகிராம்’ வழியாக விற்கப்படுவதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஆதாரத்துடன் வெளியிட்டதாகவும் கூறப்பட்டது. ‘பேஸ்புக்’ தாய் நிறுவனமான ‘மெட்டா’ அமெரிக்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதே தவிர, இந்திய போக்சோ சட்டப்படி இங்குள்ள குழந்தைகள் நல பிரிவு அல்லது உள்ளூர் போலீசாருக்கு தகவல் வழங்கவில்லை என்றும் மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியது.
இதையடுத்து, மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள், 2024-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை அமல்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள், மேலும் சமூக வலைதள நிறுவனங்கள் விதிகளை மீறுவதைத் தடுக்க எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை தெளிவுபடுத்தி விரிவான பதில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை “இறுதி வாய்ப்பு” எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.





