தொழிற்சாலைகளுக்கு விற்கப்படும் தொழில்முறை மெத்தனாலில் கட்டாயமாக நிறமூட்டி மற்றும் கசப்பு சுவையூட்டும் ரசாயனங்களை கலக்க வேண்டும் என்ற மஹாராஷ்டிரா அரசின் நச்சு விதி மாற்றங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கட்டாயக் கட்டுப்பாடுகள் மூலம் குடிப்பழக்கத்தை “குணப்படுத்த” முடியாது என்றும், முழுமையான மதுவிலக்கு பல நேரங்களில் சட்டவிரோதச் சாராயத்திற்கு வழிவகுக்கும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த வழக்கு பின்னணியாக, 1991-ல் மும்பையில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 93 பேர் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கள்ளச்சாராய உற்பத்தியைத் தடுக்க பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், 2011-ல் மாநில அரசு நச்சு விதிகளில் மாற்றங்கள் செய்து, தொழில்முறை மெத்தனாலை “திசைமாற்றம்” செய்ய முடியாத வகையில் கலவை சேர்க்கும் விதிகளை கொண்டு வந்தது.
ஆனால் மெத்தனாலை மூலப்பொருளாக பயன்படுத்தும் நிறுவனங்கள், இதில் கூடுதல் ரசாயனங்கள் கலப்பதால் உயர்தரப் பொருட்கள் தயாரிப்பில் பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தை அணுகின. மெத்தனால் அபாயகரமான பொருள் என்பதால் கட்டுப்பாடு அவசியம் என்றாலும், தொழில்முறை பயன்பாட்டுக்காக வாங்குபவர்களிடம் கடுமையான உரிமச் சோதனை, உரிமம் இல்லையெனில் பறிமுதல் போன்ற நடவடிக்கைகள் சட்டபூர்வ தொழில்துறையை பாதித்து, அடிப்படை உரிமைகளிலும் தாக்கம் ஏற்படுத்தும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மேலும், முழுமையான மதுவிலக்கு வரி வருவாய் இழப்பு, அமலாக்கச் செலவு உயர்வு, காவல் மற்றும் கலால் துறைகளில் லஞ்சம்-ஊழல் அபாயம், சட்டவிரோதச் சாராய உற்பத்தி, போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு போன்ற தீமைகளை உருவாக்கும் எனக் கூறப்பட்டது. கடுமையான மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் 10-க்கும் மேற்பட்ட பெரிய கள்ளச்சாராய விபத்துகளில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டு, மெத்தனாலில் கசப்பு சேர்ப்பது குடிப்பவர்களின் தேவையைத் தடுக்காது எனத் தெரிவித்தது.
இதற்குப் பதிலாக, கலால் சட்டங்களின் கீழ் மெத்தனால் போக்குவரத்து மற்றும் சேமிப்பை கடுமையாக்க வேண்டும் என்றும், சட்டவிரோதச் சாராய போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை நீதிமன்ற உத்தரவு வரும் வரை இடைக்கால பிணையில் விடுவிக்கக் கூடாது என்றும் பரிந்துரைத்தது. கள்ளச்சாராய அவசர நிலைகளை கையாள சுகாதாரத் துறையில் சிறப்பு பிரிவு மற்றும் அவசரகால பேரிடர் மேலாண்மை கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்றும், உற்பத்தி-விநியோகச் சங்கிலியை உடைக்க துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.





