சென்னை: தொழில் வர்த்தகர் ‘ஜெம்’ வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் (49) என்பவரிடம் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) போலீசார் விசாரணை நடத்தினர்.

வீரமணி மீது எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க எஸ்.ஐ.டி. அமைக்கப்பட்ட நிலையில், அந்தக் குழு முதலில் விசாரித்த நபராக ரஞ்சன் குமார் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஞ்சன் குமார், வீரமணி தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து 2024 நவம்பரில் சென்னை போலீசில் ஆதாரங்களுடன் புகார் அளித்ததாகவும், அப்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் முன்பே கூறியிருந்தார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது எஸ்.ஐ.டி. விசாரணை நடைபெற்றுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, தேனாம்பேட்டையில் வீரமணியின் தோழி சாந்தி வசிக்கும் வீட்டிற்கு சென்று, பாதிக்கப்பட்ட சிறுமியர் தொடர்பான வீடியோக்களை தன் மொபைல் போனில் பதிவு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், சாந்தியுடன் சேர்ந்து சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை சந்தித்ததாக வெளியான தகவல் தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.