மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. ‘டிபாசிட்’ இழக்கும் நிலை வரக்கூடாது என்று கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சியினருக்கு எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 2017-ல் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மீண்டும் நடக்கக் கூடாது என்பதே அவரது வலியுறுத்தல் என கூறப்படுகிறது.

இடைத்தேர்தல் பணிக்காக தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தக் கூட்டத்தில், 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்றதால் ‘டிபாசிட்’ இழந்ததாகவும், அதே நேரத்தில் அ.தி.மு.க. ‘டிபாசிட்’ தக்க வைத்ததாகவும் அவர் நினைவூட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், சில நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்த பின்னர் அடுத்த பொதுத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதாகவும், இடைத்தேர்தலில் நடந்த தவறுகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல் தெரிவிக்கிறது.