2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1) இந்தியாவில் அதிக அந்நிய நேரடி முதலீடு (FDI) ஈர்த்த மாநிலமாக தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்த காலாண்டில் தமிழகத்திற்கு ரூ.57,011 கோடி முதலீடு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.25,870 கோடியாக இருந்த நிலையில், இப்போது வரவு இருமடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளது. மொத்த இந்திய அந்நிய முதலீட்டு வரவுகளில் சுமார் 30 சதவீதம் தமிழகத்துக்கே கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
நிதி, வங்கி, காப்பீடு, வணிகம், ஆராய்ச்சி உள்ளிட்ட சேவைத் துறைகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. ஜப்பானின் முன்னணி நிறுவனம் MUFG மூலம் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு வந்த பெரிய முதலீடு இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கர்நாடகாவின் பங்கு 2025-26 முதல் காலாண்டில் 31% இருந்தது; 2026-27 முதல் காலாண்டில் அது 11% ஆக குறைந்துள்ளது. மகாராஷ்டிராவின் பங்கும் 29% இலிருந்து 21% ஆக சரிந்துள்ளது. குஜராத்தில் மட்டும் சற்றே உயர்வு காணப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், நடப்பு காலாண்டில் (ஜூலை–செப்டம்பர்) அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து நிறுவனம் ‘வால்கிரீன்ஸ்’ மற்றும் காபி நிறுவனம் ‘ஸ்டார்பக்ஸ்’ உள்ளிட்ட இரண்டு முக்கிய முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.





