தமிழக அரசின் உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை 2024-25ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த தணிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பல்கலைகளில் நிதி தொடர்பான முறைகேடுகள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தணிக்கையில் மொத்தம் 1.82 லட்சம் நிதி ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டு, அதன் மதிப்பு ₹6,770 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் மீட்கப்பட்ட தொகை ₹1.28 கோடி மட்டுமே என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நிதி வீணடிப்பு, நிர்வாக அலட்சியம் மற்றும் கையாடல் போன்றவை கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி, நிதி வீணடிப்பு மொத்தம் சுமார் ₹163 கோடி அளவில் பதிவாகியுள்ளது. இதில் உள்ளாட்சி அமைப்புகளில் ₹86.24 கோடி, பல்கலைகளில் ₹43.82 கோடி, மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளில் ₹26.83 கோடி, உள்ளாட்சி திட்ட குழுமத்தில் ₹6.12 கோடி என பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் திறந்தவெளி டெண்டர் இன்றி விதிகளை மீறி ₹20 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டதாகவும், துப்புரவு பணியாளர்களை அலுவலகப் பணிக்கு பயன்படுத்தியதால் ₹4.12 கோடி வீணடிப்பு ஏற்பட்டதாகவும், மூடப்பட்ட உர மையங்களுக்கு பராமரிப்பு செலவு காட்டி ₹2.12 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை தவிர்ந்த பிற மாநகராட்சிகளில் வணிக நிறுவனங்களிடமிருந்து குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வரி கட்டணங்களை குறைவாக வசூலித்ததால் ₹38.96 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது; இதில் சேலம் மாநகராட்சியில் மட்டும் ₹32.49 கோடி இழப்பு என கூறப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களின் பி.எப். தொகையை செலுத்தாமல் போலி சலான் பயன்படுத்தி ₹3.22 கோடி கையாடல் நடந்ததாகவும், திடக்கழிவு மேலாண்மை வாகனங்களுக்கு வாடகை பிடிக்காததால் ₹7.66 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், 60 நகராட்சிகளில் வரிவிலக்கு இருந்தபோதும் ஜி.எஸ்.டி. செலுத்தியதால் ₹14.28 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேரூராட்சிகளில் ‘அம்ருத் குடிநீர் 2.0’ திட்டத்தில் தரமில்லாத குழாய்கள் பொருத்தப்பட்டதால் ₹3.86 கோடி இழப்பு, கிராம ஊராட்சிகளில் ஆன்லைன் வழி வசூலித்த ₹3.99 கோடி அரசு கணக்கில் சேர்க்கப்படாதது, அண்ணாமலை பல்கலையில் ஓய்வூதியதாரர்கள் உயிருடன் உள்ளனரா என சரிபார்க்காமல் ₹19.64 கோடி ஓய்வூதியம் வழங்கப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது. நிர்வாக அலட்சியத்தால் சென்னை மாநகராட்சியின் வருவாய் பற்றாக்குறை ₹863 கோடியாகவும், நகராட்சிகளின் கடன் பொறுப்பு ₹1,699 கோடியாகவும் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டு, தவறுகளுக்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுத்து அரசு நிதியை மீட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.