நியூயார்க் நகரில் நடைபெறும் 81வது ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றத் தொடங்கியபோது, “பெரும்பாலான நாடுகள் வெளிநடப்பு செய்தன; இஸ்ரேல் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டது” என்ற வகையில் சில ஊடகங்களில் தகவல்கள் பரவின.

ஆனால், அந்த அமர்வை நேரில் கண்ட செய்தியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூறுவதாவது, நிலைமை அதைவிட வேறுபட்டதாக இருந்தது. 120க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அரங்கில் இருந்து உரையை கேட்டதாகவும், இது உலக நாடுகளின் எண்ணிக்கையில் சுமார் மூன்றில் இரண்டு பங்காகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், வீட்டோ அதிகாரம் கொண்ட அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகளின் பிரதிநிதிகளும் அவையில் இருந்து உரையை கவனித்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேலை கடுமையாக விமர்சிக்கும் அயர்லாந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் அமர்வில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

வெளிநடப்பு “பெரும் அளவில் நடந்தது” போலத் தோன்றியதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் ஆறு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், பாலஸ்தீனம் சார்பில் ஆதரவான நாடுகள் அதிகபட்ச பிரதிநிதிகளை அமர வைத்து, நெதன்யாகு பேசத் தொடங்கியதும் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதாகவும், இதனால் தொலைக்காட்சிகளில் வெளிநடப்பு பெரியதாகத் தெரிந்ததாகவும் பார்வையாளர்கள் விளக்கினர்.

நேரில் கண்டவர்கள் கூறுவதன்படி, மொத்தம் 77 நாடுகள் வெளிநடப்பில் பங்கேற்றன. இதில் ஈரான், சிரியா, ஏமன், லெபனான் போன்ற அராபிய/இஸ்லாமிய நாடுகள் மற்றும் சில ஆப்பிரிக்கா, கரீபியன் பகுதியைச் சேர்ந்த சிறிய நாடுகள் அதிகம். பெரிய நாடுகளில் ஸ்பெயின், பிரேசில், தென் ஆப்ரிக்கா பங்கேற்றதாகவும், அதே நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் பிரதிநிதிகள் அவையிலேயே இருந்து உரையை கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.