‘ஜெம் கிரானைட்’ வீரமணி கைது விவகாரத்தில் முதல்வர் விஜய் பொய் கூறியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) குற்றம்சாட்டினார். கைது நடவடிக்கை அரசின் உத்தரவால் அல்ல; நீதிமன்ற உத்தரவின்படியே நடந்ததாக அவர் தெரிவித்தார்.

மதுராந்தகத்தில் பேசிய இபிஎஸ், வீரமணி மீது வழக்கு திமுக ஆட்சிக்காலத்திலேயே பதிவு செய்யப்பட்டதாக கூறினார். வழக்கு விசாரணையில் “ஆதாரம் இல்லை” என தெரிவிக்கப்பட்டபோதும் நீதிபதி அதை ஏற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்த வழக்கு ஜூன் 19 அன்று நீதிமன்றத்தில் வந்ததாகவும், அப்போது அதிகாரிகள் வாய்தா கேட்டபோது நான்கு வாரங்களில் முழு விவரங்களும் அறிக்கையும் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டதாகவும் இபிஎஸ் கூறினார். ஆகஸ்ட் 3 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை; மீண்டும் வாய்தா கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 27 அன்று வழக்கு வந்தபோது தடயவியல் துறை அறிக்கை வரவில்லை என போலீசாரும் அரசு வழக்கறிஞரும் தெரிவித்ததாக இபிஎஸ் கூறினார். பலமுறை வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடிப்பதாகக் குறிப்பிட்டு, உடனடியாக வீரமணியை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டதாகவும், அதன்படியே போலீசார் கைது செய்ததாகவும் அவர் விளக்கினார்.

மேலும், தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் விஜய் கூறிய “அரசு உத்தரவின்பேரில் கைது” என்ற கருத்து அப்பட்டமான பொய் என இபிஎஸ் குற்றம்சாட்டினார். தற்போதைய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 250 கொலைகளும் 300 பாலியல் சீண்டல் சம்பவங்களும் நடந்துள்ளதாகவும், இதற்கு முதல்வர் என்ன பதில் கூறப் போகிறார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.