வீரமணி தொடர்பான போக்சோ வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்காக கூடுதலாக 7 உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல ஆண்டுகளாக சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்த வழக்கில் உடந்தையாக இருந்ததாக கூறப்படும் சாந்தி என்ற பெண் மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் பெரிய அளவிலான தொடர்புகள் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகும் நிலையில், தமிழக அரசு ஏற்கனவே எஸ்ஐடி குழுவை அமைத்திருந்தது.

அந்த எஸ்ஐடி குழுவில் 4 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, சென்னை மேற்கு சட்டம்-ஒழுங்கு இணை கமிஷனர் திஷா மிட்டல், காவல்துறை தலைமை அலுவலக ஊடக தொடர்பு அலுவலர் முத்தரசி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை காவல் கமிஷனர் கீதாஞ்சலி ஆகியோர் இதில் உள்ளனர். இந்த குழு சென்னை காவல் ஆணையர் நேரடி கண்காணிப்பில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் எஸ்ஐடி குழுவை விரிவாக்கி 7 உதவி கமிஷனர்களை சேர்க்க டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.