புதுடில்லி: முழுக்க 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் பயணியர் கார் அடுத்த மாதம் அறிமுகமாக உள்ளதாகவும், அதை இயக்கும் எரிபொருள் செலவு பெட்ரோல் காருடன் ஒப்பிடுகையில் பாதியாக குறையக்கூடும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் ‘இ-20’ கொள்கை தற்போது அமலில் இருப்பதை அவர் குறிப்பிட்டார். இதன் தொடர்ச்சியாக, 100% எத்தனாலில் இயங்கக்கூடிய டொயோட்டா நிறுவனத்தின் ‘இன்னோவா’ பிளக்ஸ்-பியூயல் மாடல் அக்டோபரில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறினார்.
உலகில் 19 நாடுகளில் எத்தனால் பயன்படுத்தப்படுவதாகவும், இந்தியாவில் எத்தனால் கலந்த எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பாக இதுவரை புகார்கள் வரவில்லை என்றும் கட்கரி தெரிவித்தார். வரவிருக்கும் மாடலில் பெட்ரோல் பயன்படுத்தப்படாது என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த கார் இயங்கும் போது சுமார் 60% மின்சாரம் உற்பத்தியாகி, காரில் உள்ள ஹைபிரிட் பேட்டரியை சார்ஜ் செய்யும் என அவர் விளக்கினார். அந்த சார்ஜை பயன்படுத்தி மின்சார மோட்டாரை இயக்கியும் வாகனத்தை ஓட்ட முடியும் என்றார்.
அதே நிகழ்ச்சியில், செயலி அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஏற்கனவே இருசக்கர வாகனம் வைத்திருப்போர் கூடுதல் முதலீடு இல்லாமல் வருவாய் ஈட்ட முடியும் என்றும், மாநிலங்கள் இதை செயல்படுத்தினால் கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் அவர் கூறினார்.





