அமராவதி: மாநிலம் முழுதும் பள்ளிக் கல்வியில் பாலின சமநிலையை வலுப்படுத்தும் வகையில் ஆந்திர அரசு பாடத்திட்டம் மற்றும் கற்றல் முறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
மாநில கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் கூறியதன்படி, முன்பு 1 மற்றும் 2ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் வீட்டு வேலைகள் பெண்களால் மட்டுமே செய்யப்படுவது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. தற்போது பாலின பாகுபாடுகளை தவிர்க்கும் நோக்கில், ஆண்-பெண் இருவரும் சமமாக பொறுப்புகளை பகிர்ந்து செய்வதாக உள்ளடக்கம் மாற்றப்பட்டுள்ளது. சிறு வயதிலிருந்தே பெண்கள் மீது மரியாதை வளர்க்கும் நோக்கமும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனுடன், கலந்துரையாடல் முறை கற்றலை ஊக்குவிக்க தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வகுப்பறைகளை மேலும் சுவாரசியமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, குறும்படக் காணொளி மற்றும் கேள்வி-பதில் அடிப்படையிலான செயல்முறை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு 45 நிமிட வகுப்பிற்குப் பிறகும் 60 முதல் 90 வினாடி வரை பாடச் சுருக்கக் காணொளி மாணவர்களுக்கு காட்டப்படும். பின்னர் 4 முதல் 5 கேள்விகள் கேட்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் பிரத்யேக மின்னணு கருவி மூலம் அவர்கள் பதிலளிப்பர்; அதனைத் தொடர்ந்து வகுப்பில் கலந்துரையாடலும் நடைபெறும்.
மேலும், பள்ளிகளில் சனிக்கிழமை ‘பை இல்லா நாள்’ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் குடும்பம் மற்றும் விவசாய பட்ஜெட் நிர்வகித்தல், களப் பயணங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அறிமுகம் உள்ளிட்ட நடைமுறை சார்ந்த பாடங்கள் நடத்தப்படுகின்றன; ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் நன்மை-தீமைகளும் விளக்கப்படுகின்றன. இச்சீர்திருத்தங்கள் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.





