அயோத்தி ராமர் கோவிலில் நன்கொடை மற்றும் காணிக்கை பணம் திருடப்பட்டதாக கூறப்படும் வழக்கில் விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி), ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் பொறுப்பாளர்கள் இருவரை அரசு சாட்சிகளாக சேர்த்துள்ளதாக, அயோத்தி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவில் கட்டுமான காலத்தில் பக்தர்கள் தங்கம், வெள்ளி, ரொக்கம் உள்ளிட்ட நன்கொடைகளை வழங்கியதுடன், பின்னரும் உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வந்தனர். இந்நிலையில், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட சில ஊழியர்கள் லட்சக்கணக்கில் பணத்தை கையாடி மறைத்து வைத்து, பின்னர் கோவில் வளாகத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்றதாக எஸ்.ஐ.டி விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டு, நம்பிக்கை மோசடி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணிக்கை எண்ணும் அறையில் நடந்த திருட்டு சம்பவங்கள் 100 முறைக்கும் மேல் சி.சி.டி.வி பதிவுகளில் இருப்பதாகவும், அவினாஷ் சுக்லா 85 முறையும், கருணாஷ் பாண்டே இரு முறையும் திருடியதாகவும், மற்ற ஊழியர்கள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றப்பத்திரிகை சுட்டிக்காட்டுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம், அமெரிக்க டாலர்கள், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது. அவினாஷ் சுக்லாவிடம் இருந்து ரூ.20.39 லட்சம், அனுகல்ப் மிஸ்ராவிடம் இருந்து ரூ.18.07 லட்சம், லவ்குஷ் மிஸ்ராவிடம் இருந்து ரூ.14.25 லட்சம் மீட்கப்பட்டதாகவும், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 76,000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் 133 அரசு சாட்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், அதில் முன்னாள் அறங்காவலர் அனில் குமார் மிஸ்ரா மற்றும் முன்னாள் பொதுச் செயலர் சம்பத் ராய் ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4 அன்று நடந்ததாக கூறப்படும் ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக, கோவில் கழிப்பறையில் இருந்து பணம் மீட்கப்பட்டதை சம்பத் ராய் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.





