புதுடில்லி: தமிழகத்தில் பா.ஜ. தள்ளாடும் நிலையில் இருந்தாலும், மாநிலத்தைப் பற்றி கட்சியின் மத்திய தலைமை பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை என்றே தகவல்கள் கூறுகின்றன.

ஆர்.எஸ்.எஸ். சார்ந்த கேசவ விநாயகம், தமிழக பா.ஜ. மாநில அமைப்பு பொதுச் செயலராக சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றினார். பிப்ரவரியில் அவர் மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுப்பப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.

இதற்கிடையில், ஆர்.எஸ்.எஸ். பின்னணியுள்ள ராம் மாதவ் தமிழக பா.ஜ.வின் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அமைப்பு பொதுச் செயலர் பதவிக்கான நியமனம் இன்னும் இல்லை. தற்போது அந்த பதவிக்கு நியமிக்க பா.ஜ. தேசிய தலைவர் நிதின் நபினுக்கு விருப்பமில்லை என்றும், அடுத்தாண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச தேர்தலே முக்கியம் என்ற முன்னுரிமை இருப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது.

மற்றொரு பக்கம், தமிழகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் விரும்புவதாக கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் காஞ்சி சங்கராச்சாரியார்களை சந்தித்து, தமிழகத்தில் மதமாற்றத்தைத் தடுப்பது குறித்து பேசினார் என்றும், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியதாகவும் தகவல்.

கட்சிக்குள், காலியாக உள்ள அந்த முக்கிய பதவிக்கு திறமையான ஒருவரை நியமித்தால்தான் தமிழகத்தில் பா.ஜ. மீண்டும் முன்னேற முடியும் என்ற கருத்து பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது.