தொழிலாளர் இழப்பீட்டு சட்டத்தின் வரம்பில் கோவிலும் ‘தொழில் நிறுவனம்’ எனக் கருதப்படும் என்பதை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. பணியில் இருந்தபோது கொள்ளையைத் தடுக்க முயன்ற நிலையில் உயிரிழந்த கோவில் காவலாளியின் மனைவி தாக்கல் செய்த இழப்பீட்டு மனுவை, ஆறு வாரங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க தொழிலாளர் நல நீதிமன்றத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தீர்த்தபாலேஸ்வரர் கோவிலில் ‘மீனா செக்யூரிட்டி சர்வீஸ்’ மூலம் பணியமர்த்தப்பட்ட பாபு என்பவரைச் சார்ந்தது. 2021 ஜூன் 17 அன்று பணியில் இருந்தபோது, கோவில் உண்டியலை திருட முயன்றதாக கூறப்படும் நபர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்துக்குப் பின்னர், அறநிலையத் துறை கருணை அடிப்படையில் ரூ.5 லட்சம் வழங்கியது. அதன்பின், சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாபுவின் மனைவி ஸ்ரீதேவி, வழக்கறிஞர்கள் வி.எஸ்.சுரேஷ் மற்றும் ஜி.தேவி மூலம் தொழிலாளர் நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
பாபுவை நேரடியாக தாங்கள் பணியமர்த்தவில்லை என்பதால் தங்களிடம் இழப்பீடு கோர முடியாது என கோவில் நிர்வாகமும் அறநிலையத் துறையும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் தொழிலாளர் நல நீதிமன்றம் அந்த எதிர்ப்பை நிராகரித்து, தொழிலாளர் இழப்பீட்டு சட்டப்படி கோவிலும் தொழில் நிறுவனம் எனக் கூறி மனுவை விசாரணைக்கு ஏற்றது.
இதனை எதிர்த்து கோவில் செயல் அலுவலர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிபதி கே.சுரேந்தர், தொழிலாளர் இழப்பீட்டு சட்டத்தில் கோவிலும் தொழில் நிறுவனம் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளதால் தொழிலாளர் நல நீதிமன்ற உத்தரவில் தலையிட காரணமில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், ஸ்ரீதேவியின் இழப்பீட்டு மனுவை ஆறு வாரங்களில் முடிக்க தொழிலாளர் நல நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.





