புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடம் செயல்பாட்டில் உள்ள நிலையில், அதன் முக்கிய நுழைவாயிலுக்கு “மகர துவார்” என்று பெயரிடப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின்போது டில்லியில் கனமழை பெய்ததால், இந்த நுழைவாயிலில் குளம்போல் நீர் தேங்கி, வெளியே செல்ல எம்.பி.க்கள் தயங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
நுழைவாயிலில் தேங்கிய நீரில் கால்வைத்து நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், உள்ளே நுழையும் போது மழையில் நனையவும் நேரிட்டது. இதையடுத்து அப்போது சுமார் 400 குடைகள் வாங்கப்பட்டு, அவற்றை பயன்படுத்தி ஊழியர்கள் எம்.பி.க்களை பார்லிமென்டிற்குள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
சுமார் 1,200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பார்லிமென்டில் இத்தகைய குறைபாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சபாநாயகர் ஓம் பிர்லா கட்டட நிபுணர்களின் ஆலோசனையுடன் மகர துவார் முன் போர்ட்டிகோ போன்ற மூடப்பட்ட அமைப்பு அமைக்கும் திட்டத்தை தயாரித்தார். தற்போது நுழைவாயில் முன்பாக தாழ்வாரம் போன்ற அமைப்பு கட்டப்பட்டு வருவதால், இனி மழைநீர் தேங்குவதும் குடை தேவைப்படுவதும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





