புதுடில்லி: இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி நிச்சயம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை கடுமையாக எச்சரித்தார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், பாலக்கோட் தாக்குதல் முதல் “ஆபரேஷன் சிந்தூர்” வரை இந்தியா தெரிவிக்கும் செய்தி ஒன்றே என குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை உறுதியான பதிலடி நடவடிக்கையின் மூலம் எதிர்கொள்வோம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும், ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நிகழ்ந்து 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ளதாகவும் அவர் நினைவூட்டினார். எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை தாக்கிய வீரர்களின் துணிச்சல் உலகையே வியப்பில் ஆழ்த்தியதாகவும், அது இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கைக்கு புதிய முன்னுதாரணமாக அமைந்ததாகவும் கூறினார்.

மேலும், 2014ல் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு நியூயார்க்கில் அப்பாவி குடிமக்களுக்கு அஞ்சலி செலுத்த சென்றதை நினைவுகூர்ந்த அவர், துயருற்ற குடும்பங்களுக்கு கோடிக்கணக்கான இந்தியர்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒரு தேசியப் பொறுப்பு என்றும், இதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு இருப்பதாகவும் மோடி கூறினார். அதேபோல், போதைப்பொருளுக்கு எதிராக இந்திய இளைஞர்கள் ஒன்றிணைந்து வருவதாகவும், போதைப்பொருள் ஒழிப்பு இளைஞர் இயக்கம் மூலம் பிரசாரங்கள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

பாரம்பரியத்தைப் பற்றி பேசும்போது, குஜராத்தின் மொதேரா சூரியக் கோவில் குறித்து அவர் குறிப்பிட்டார். கி.பி. 1026ல் சோமநாதர் கோவில் அழிக்கப்பட்ட அதே ஆண்டில் மொதேரா கோவிலும் இடிக்கப்பட்டதாகவும், அதற்கு இப்போது 1000 ஆண்டுகள் நிறைவடைவதாகவும் கூறினார். முதலாம் பீமதேவன் கஜினி முகமதுவை எதிர்த்து நின்றதுடன், குறுகிய காலத்தில் மொதேரா கோவிலை மீண்டும் கட்டியெழுப்பியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ளூர் கல்லூரி தமிழ்த் துறையைச் சேர்ந்த செல்வராஜு முன்னெடுத்து வரும் கள ஆய்வில் பல சிற்பங்கள் மற்றும் பழங்காலக் கோயில்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறி, அந்த முயற்சியை பாராட்டினார்.