சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், ‘ஜெம்’ வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததால் மனமுடைந்த தனது 16 வயது மகள் தற்கொலை செய்து கொண்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், குடும்பத்தின் ஏழ்மையான சூழ்நிலையை பயன்படுத்தி மகளின் கல்விக்கு உதவி செய்வதாக கூறி வீரமணி அணுகியதாகவும், பின்னர் அந்த நெருக்கத்தை பயன்படுத்தி சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் தாய் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமி தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துக்குப் பிறகு உடனடியாக ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் வீரமணியின் பணபலமும் செல்வாக்கும் காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பின்னர் விசாரித்தபோது ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான பிரச்னைகளின்போது புகார் மனு மாயமானதாக கூறி வழக்கை முடித்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது வீரமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனது மகளின் இறப்புக்கு நீதி கிடைக்கவும், காரணமானவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரியுள்ளார். சிறுமியர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





