நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் செப். 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள நிலையில், அந்த நாட்களில் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என பொதுத்துறை வங்கிகள் முடிவு செய்துள்ளன.

வாடிக்கையாளர்கள் சந்திக்கும் சிரமத்தை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்பை ஏற்கனவே தாண்டியிருந்தாலும், இந்த மூன்று நாட்களில் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி உள்ளிட்ட பல பொதுத்துறை வங்கிகள் தனித்தனியாக அறிவிப்புகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளன.

தற்போதைய ரிசர்வ் வங்கி விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு உள்ள வங்கியின் ஏடிஎம்களில் மாதத்திற்கு ஐந்து முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். மற்ற வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தும்போது சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டில்லி-என்.சி.ஆர்., கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்களில் மூன்று முறை; பிற பகுதிகளில் ஐந்து முறை கட்டணமின்றி பரிவர்த்தனை செய்யலாம்.

இந்த இலவச வரம்பை மீறினால், ஜிஎஸ்டி தவிர்த்து அதிகபட்சமாக ரூ.23 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் வேலைநிறுத்த நாட்களில், இந்த கூடுதல் கட்டணம் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படாது என பொதுத்துறை வங்கிகள் தெரிவித்துள்ளன.