ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பங்களும் துணையாக இருந்தால் இந்தியா 10 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்டும் சாத்தியம் உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பெங்களூருவில் நடைபெற்ற ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் சங்க நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழில்நுட்பம், புதுமை மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் இத்தகைய உயர்ந்த வளர்ச்சி பாதையை நாடு அடைய முடியும் என்றார்.
இந்த அளவிலான வலுவான வளர்ச்சி, ‘ஆத்மநிர்பார் பாரத்’ மற்றும் ‘விக்சித் பாரத்’ இலக்குகளை நோக்கி நாட்டை வேகமாக நகர்த்த உதவும் என்றும் அவர் கூறினார். மேலும், 2015 முதல் ஸ்டார்ட்அப் துறை தொடர்ந்து விரிவடைந்து வருவதாகவும், பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் முன்னேற்றத்தை குறைத்து மதிப்பிடும் எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய அவர், விவசாயிகளை சந்தைகளுடன் இணைப்பது உள்ளிட்ட துறைகளில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன; அறுவடை மற்றும் நிலத் தயாரிப்பு பணிகளை விரைவுபடுத்தவும் தொழில்நுட்பம் பயன்படுகிறது என்றார்.





