தகவல் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) கீழ் சட்டம்-ஒழுங்கு தொடர்பான சில தகவல்களை வழங்க வேண்டாம் என வெளியிடப்பட்ட அரசாணையை, கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.
சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் துறை உளவு மற்றும் பாதுகாப்பு சார்ந்த அமைப்பாக செயல்படுவதால், அதற்கு ஆர்டிஐ சட்டம் பொருந்தாது என்ற நிலைப்பாட்டை அரசு முன்வைத்திருந்தது.
இந்த உத்தரவால் சாதி மற்றும் சமூக மோதல்கள், காவல்துறை துப்பாக்கிச் சூடு, காவல் சித்ரவதை குற்றச்சாட்டுகள், காவலில் ஏற்படும் மரணங்கள் ஆகியவற்றைச் சார்ந்த விசாரணை அறிக்கைகள் ஆர்டிஐ மூலம் கிடைக்காது என்ற அச்சம் எழுந்தது. இதனால் பல்வேறு தரப்புகளில் இருந்து கடும் எதிர்ப்பு உருவானது.
தமிழக வெற்றிக்கழகத்தின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தின. பல அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆர்டிஐ விலக்கு உத்தரவை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.





