மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி துக்காராம் முண்டே, உணவுப்பொருள் கலப்படத்தை கட்டுப்படுத்த உற்பத்தி முதல் விநியோகம் வரை முழுமையான கண்காணிப்பே முக்கியம் என தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உணவுப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களும் விதிகளும் இருந்தாலும், அவை முறையாக நடைமுறையில் பின்பற்றப்படவில்லை என்றார்.

உரிமம் மற்றும் பதிவு செய்வதைத் தவிர, பிற கட்டாய விதிமுறைகள் பல இடங்களில் சரியாக கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற அலட்சியம் பொதுச் சுகாதார நெருக்கடிக்கு வழிவகுக்கிறது என எச்சரித்தார்.

மேலும், தங்களின் உடல்நலக் குறைபாடுகளுக்கும் தாங்கள் உட்கொள்ளும் உணவு, பானங்களின் தரம் மற்றும் உண்மைத் தன்மைக்கும் உள்ள தொடர்பை பலர் உணர்வதில்லை என்றும் கூறினார். இதுவே நாட்டின் முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாக மாறியுள்ளது என்றார்.

சுதந்திர காலத்தில் தொற்று நோய்கள் அதிகமாக இருந்த நிலையில், தற்போது தொற்றா நோய்கள் அதே அளவுக்கு பரவியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். புற்றுநோய், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்றவை நாம் உண்ணும் உணவுடன் நேரடி தொடர்புடையவை என்பதால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடுகளில் அதிக விழிப்புணர்வு தேவை என்றார். இது உணவகங்களில் மட்டுமல்ல, வீட்டிலும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குறிப்பாக பால் போன்ற பொருட்களில் உற்பத்தி முதல் விநியோகம் வரை உள்ள செயல்முறைகளை கண்காணிப்பது அவசியம் என முண்டே தெரிவித்தார். இப்படியான கண்காணிப்பின் மூலம் கலப்படத்தையும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளையும் கட்டுப்படுத்த முடியும் என்றார்.