மும்பை: தலைமை என்பது ஒருவர் பெற்றிருக்கும் அதிகாரத்தின் அளவால் அல்ல; அவர் உருவாக்கும் மாற்றத்தின் தாக்கத்தால் மதிப்பிடப்பட வேண்டும் என்று மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் துக்காராம் முண்டே தெரிவித்துள்ளார்.
மாநில உணவு பாதுகாப்பு ஆணையராக பணியாற்றும் முண்டே, அதிரடி நடவடிக்கைகள் மூலம் மும்பை உணவகங்களில் தூய்மை மற்றும் உணவுத் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாற்றங்களுக்கு அவரது செயல்பாடுகளே காரணம் என மக்கள் மத்தியில் வரவேற்பும் காணப்படுகிறது.
‘மாற்றத்தை உருவாக்குபவராக இருங்கள்’ என்ற தலைப்பில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், மக்களின் பங்களிப்பு இல்லாமல் கொள்கையாலும் நல்லாட்சியாலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றார். நல்லாட்சியை மக்களுடன் இணைந்து உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், பொதுத் தலைமை என்பது மக்களின் நம்பிக்கையைப் பெறுதல், பொறுப்புணர்வை வளர்த்தல், மாற்றத்திற்கான செயல்பாட்டில் மக்களை ஈடுபடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார். ஒரே நபர் எவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறார் என்பதைக் காட்டிலும், அர்த்தமுள்ள நடவடிக்கையே முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார்.





