சென்னை: அரசு எந்தக் கொள்கை முடிவையும் அறிவிப்பதற்கு முன், அதன் சட்டரீதியான அம்சங்கள், நிர்வாக நடைமுறை விளைவுகள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம் என்று ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், தவெக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில் பல முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் எதிர்ப்பு எழுந்ததும் திரும்பப் பெறப்படும் போக்கு காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
முதல்வரின் அரசியல் பிரிவில் சிறப்பு அதிகாரி நியமனம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடு, மேலும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆர்டிஐ விலக்கு போன்றவை இதற்கான உதாரணங்களாக அவர் பட்டியலிட்டார்.
இத்தகைய முடிவுகள் முதல்வர் விஜய்யின் கவனத்திற்கும் ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா, அல்லது முதல்வருக்கு தெரியாமலேயே முக்கிய நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுகிறதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். அவசரமாக அறிவித்து பின்னர் திரும்பப் பெறுவது நிர்வாகத்தில் தெளிவின்மையையும், முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் உருவாக்கும் என்றார்.
எதிர்ப்பு வந்ததும் திரும்பப் பெறும் நிலைக்கு பதிலாக, முடிவெடுக்கும் முறையில் அதிக கவனம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு காட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.





