சென்னை: பொதுவெளியில் யார் அதிகமாக கீழ்த்தரமாக பேச முடியும் என்ற போட்டியாக தமிழக அரசியல் மாறி வருவதாக, ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மற்றும் அமைச்சர் ஆதவ் ஒருவரையொருவர் தரம் தாழ்ந்து விமர்சித்துப் பேசியதாக கூறப்படும் வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.

தன் பதிவில், பொதுவெளி பேச்சின் தரம் தொடர்ந்து சரிவடைந்து வருவதாகவும், இதை இளைஞர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

இளைஞர்களுக்கு சரியான பாதையை காட்ட முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நாகரிகமற்ற நடத்தையால் அவர்களை இருண்ட பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டாம் என்றும், அரசியல் தலைவர்கள் பொதுவெளி பேச்சில் நாகரிகத்தையும் பொறுப்பையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.