சென்னை: பா.ஜ.க தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகி நடத்தி வரும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை வலுப்படுத்த, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரிடம் அவர் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 20.19 லட்சம் பேர் அமைப்பில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வீ தி லீடர்ஸ்’ வட்டாரங்கள் கூறுகையில், அண்ணாமலை பா.ஜ.க மாநிலத் தலைவராக இருந்த காலத்தில் அ.தி.மு.க உள்ளிட்ட பல கட்சிகளிலிருந்து 15க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.கவில் இணைத்ததாக தெரிவித்தன. ஆனால், சிலரைத் தவிர பலருக்கு கட்சிப் பதவிகள் கூட கிடைக்கவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
இதன் பின்னணியில், தன்னை நம்பி பா.ஜ.கவுக்கு வந்தவர்களிடம் அண்ணாமலை தற்போது மீண்டும் பேச்சு நடத்துவதாகவும், பெரிய சர்ச்சைகளில் சிக்காதவர்கள், ஊழல் புகார் இல்லாதவர்கள், ஓரளவு மக்கள் செல்வாக்கு கொண்ட அ.தி.மு.க–தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளிடமும் தொடர்பு கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தில் அமைப்பு வலுவாக இருந்தாலும், தென் மாவட்டங்களில் பலவீனமாக இருப்பதால் அப்பகுதிகளில் உள்ள ‘மாஜி’க்களை எதிர்பார்ப்பதாக வட்டாரங்கள் கூறின. தன்னை நம்பி வருவோருக்கு அமைப்பில் மாநில பொறுப்புகள் வழங்கப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.





